வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண 5 பேர் கொண்ட குழு ஓஷன் கேட் நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பயணத்தை தொடங்கினர். நீர் மூழ்கி கப்பலில் இருந்த பைலட் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபரான 58 வயது ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் தொழிலதிபரான் 48 ஷாஷாதா, அவரது 19 வயது மகன் சுலேமான் தாவூத், டைட்டானிக் கப்பல் பற்றி ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் நாட்டின் கடற்படை வீரர் பால் ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர்தான் இந்த பயணத்தில் இருந்தனர்
இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் கடலுக்கு மேற்பரப்பில் இருந்த அனைத்து தொடர்புகளையும் இழந்தது. இதையடுத்து டைட்டன் கப்பலை தேடும் பணியை முடுக்கி விட்டது அமெரிக்க கடலோர காவல்படை. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் நடைபெற்று வந்த இந்த தேடுதல் பணியில், கனேடிய விமானங்கள், அமெரிக்க கடலோர காவல் படையின் கப்பல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.
கடலில் கேட்கும் சத்தங்களை கண்டறியும் வகையில் சோனார் மிதவைகள் மற்றும் ரோபோட்டுகளும் இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 96 மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருந்ததால் அதற்குள் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.