4 வயது சிறுமி தாக்கப்படும் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கியுள்ளார்.
இந்த சன்மானம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படும் குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் இணைந்து, குறித்த காணொளியை வெளியிட்ட இளைஞனுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானத்தை வழங்கியுள்ளனர்.
இந்தக் காணொளி வெளியானதால் தான் குறித்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார் என்ற போதும், சிறுவர் தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படும் காட்சிகளை வெளியிடுவதற்கு பரவலான தடை இருந்து வரும் சூழலில், இவ்வாறான காணொளியை வெளியிட்டவருக்கு இலங்கை அரசாங்கம் சன்மானம் வழங்கி கௌரவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.