யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் கால்நடைகளை வெட்டுபவர்கள் 10 லிட்டர் பால் கறக்கும் என்னுடைய பசு மாட்டிணையும் வெட்டிவிட்டார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கவலை தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகப் பகுதிகளில் வளர்ப்புக் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அறிகிறேன்.
அந்த பிரதேசத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் சரியான விதத்தில் செயல்பட்டால் பொலிசாரின் உதவியுடன் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஆனால் கிராம உத்தியோகத்தர்கள் சமூக பொறுப்புடன் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஏன் நான் இதை கூறுகிறேன் என்றால் எனது மாட்டை வெட்டியவர்கள் தொடர்பில் கிராம சேவையாளர் அறிக்கை மட்டுமே வழங்கியுள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தொடர்பில் அறியாதவராய் உள்ளார். தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் குற்றம் நடக்கும்போது அது தொடர்பில் ஆராய்ந்து உரிய தரப்பினருக்கு வெளிப்படுத்தும் பொறுப்பு கிராம உத்தியோகத்தருக்கு உள்ளது என்றார்.