சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் குழு, இலங்கையின் முதலாவது அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அடையாளம் காண்பதற்கான ஏழு நாள் பாதுகாப்பு மீளாய்வை முடித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மின்சார உற்பத்திக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவதற்காக, மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை இந்த மதிப்பாய்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கை அணுமின் உலையை அமைப்பதற்கான தள ஆய்வுக் கட்டத்தை நிறைவு செய்துள்ளது என்றும், மூன்று பிராந்தியங்களில் இருந்து ஆறு இடங்களை அதற்கு அடையாளம் கண்டுள்ளதாகவும், சர்வதேச அணுசக்தி முகமையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அடுத்த கட்டமாக, இடங்களின் மதிப்பீடு, ஒப்பீடு மற்றும் தரவரிசை ஆய்வுகள் ஆகியவை இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
ஆய்வுக் குழுவில் கனடா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று நிபுணர்களும், சர்வதேச அணுசக்தி முகமையின் ஊழியர் ஒருவரும் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவில் இலங்கை விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் குழுவினரால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டையில் உள்ள இடமும் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குழுவின் அறிக்கை 3 மாதங்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்படும்.