இந்தியாவில் நேற்றுடன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும், தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
முன்னணி இந்தி நாளிதழான தைனிக் பாஸ்கர் வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 281 தொடக்கம் 350 தொகுதிகளையும் , இண்டியா கூட்டணி 145 தொடக்கம் 201தொகுதிகளையும், ஏனைய கட்சிகள் 33 தொடக்கம் 49 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ரிபப்ளிக் டிவி-பிமார்க் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் பாஜக கூட்டணிக்கு 359, இண்டியா கூட்டணி 154, ஏனைய கட்சிகளுக்கு 30 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ரிபப்ளிக் பாரத் மேட்ரிஸ், ஜன் கி பாத், நியூஸ் நேஷன், நியூஸ் எக்ஸ் மற்றும் டி-டைனமிக்ஸ், இண்டியா டிவி-சிஎன்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பிலும் பாஜக கூட்டணிக்கு 350-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மேற்குவங்கம், பிஹார், டெல்லி, சத்தீஸ்கர், அசாம், ஆந்திரா, ஒடிசா, உத்தராகண்ட், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக முதல் முறையாக கால் பதிக்கும் என்றும் கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும், பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்சம் 26-ல் இருந்து அதிகபட்சம் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லக்கூடும் என கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை வெல்லக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ் நிறுவனம் அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.