17.1 C
New York
Wednesday, October 22, 2025
spot_img

மாணவிகளை தாக்கிய வழக்கு – அருட்சகோதரிக்கு நிபந்தனையுடன் பிணை!

யாழ்ப்பாணத்தில், விடுதியில் இருந்த மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அடித்து துன்புறுத்தியதாக கூறி கடந்த செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த மாணவிகள் 11 பேர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். 

அதனையடுத்து மாணவிகளை யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்திய வேளை, மாணவிகளின் உடலில் தழும்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது. 

அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார், அருட்சகோதரியை கைது செய்து , ஊர்காவற்றுறை பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , அவரை புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தநிலையில்  குறித்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

வழக்கு விசாரணையில் , அருட்சகோதரியை 50 ஆயிரம் ரூபாய் காசு பிணை, ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , மாணவ விடுதிக்கு அருட்சகோதரி செல்ல கூடாது எனவும் , பாதிக்கப்பட்ட மாணவர்களுடனோ , அவர்களின் பெற்றோர்களுடனோ தொடர்பு கொள்ள கூடாது எனவும் நிபந்தனையும் விதித்துள்ளது.

Related Articles

Latest Articles