8.7 C
New York
Friday, October 18, 2024
spot_img

பிள்ளைகளை கட்டித் தொங்கவிட்டு சித்திரவதை செய்த தாய் கைது!

தனது 11 வயது மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, அடித்து சித்திரவதை செய்ததுடன் இரண்டரை வயது ஆண் பிள்ளையை கட்டித் தொங்கவிட்டு, துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில், பிள்ளைகளின் தாயாரான  28 வயதுடைய பெண், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலாவதாக இந்து முறைப்படி திருமணம் முடித்த குறித்த பெண், கணவனை விட்டுவிட்டு, அவருக்கு பிறந்த முதல் குழந்தையுடன் இஸ்லாம் மதத்துக்கு மாறி, முஸ்லிம் நபரொருவரை திருமணம் முடித்துள்ளார்.

இந்நிலையில், அவரையும் விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். அவ்விருவருக்கும்  இரண்டரை வயதில் ஆண் பிள்ளை உள்ளது.

அவரையும் விட்டுவிட்டு, தனது  இரு பிள்ளைகளுடன் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்துக்கு மீண்டும் வந்து வாழ்ந்து வருகின்றார்.

இந்தநிலையில் தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை, புகைத்தலில் ஈடுபட்டார் என மரமொன்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். ஏப்ரல் மாதம் இவ்வாறு சித்திரவதை செய்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, இரண்டரை வயதுடைய இரண்டாவது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தந்தையான புத்தளத்தைச் சேர்ந்த சிங்களவருக்கு தெரியவந்துள்ளது. அதனையடுத்து உடனடியாக ஏறாவூருக்கு சென்று, தன்னுடைய மகனை தருமாறு அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார்.  

இதனையடுத்து தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரணை செய்த பொலிஸார், அந்த தாயாரின் அலைபேசியை சோதித்துள்ளனர். அதில், அவ்விரு சிறுவர்களையும் தடியால் அடித்து துன்புறுத்தியமை  தொடர்பில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன.

அதன்பின்னர், அப்பெண்ணை கைது செய்த பொலிஸார், அவ்விரு பிள்ளைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். குறித்த பெண்ணின் 24 வயதுடைய சகோதரரும் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருவரையும் நேற்று 29 ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களையும் ஏறாவூர் ஆயிஷா லு அபூபக்கர் சித்திக் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles