வட கொரியா, இராட்சத பலூன்களில், மனித மற்றும் விலங்கு கழிவுகள், குப்பைகளை தென்கொரியாவுக்கு மேலாக பறக்க விட்டு, புதுப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
சுமார் 260 இராட்சத பலூன்கள், இவ்வாறு வட கொரியாவில் இருந்து தென் கொரியா மீது பறக்கவிடப்பட்டுள்ளன.
ஒரே நாளில் இந்த பலூன்கள் எல்லையை கடந்து வந்து தென் கொரியாவில் தரையிறங்கியதாக தென் கொரிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அந்த பலூன்களில் குப்பைகள் , விலங்கு மற்றும் மனித கழிவுகள், பயன்படுத்திய கழிப்பறை கடதாசிகள் போன்றவை இருந்ததாகவும் தென் கொரியா கூறியுள்ளது.
’இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், பொது பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்துவதாகவும்’ தென் கொரிய இராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
வட கொரியாவின் கழிவுகள், குப்பைகள் அடங்கிய பலூன்கள் குறித்து, அவை தரையிறங்கும் வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரங்களில் வீட்டுக்கு வெளியே வருவதை தவிர்க்குமாறும் தென் கொரிய அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.