முதலீட்டு நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் இணை உரிமையாளரான ரவி ரூயா, ரஷ்ய சொத்து முதலீட்டாளர் ஆண்ட்ரே கோன்சரென்கோவுடன் தொடர்புடைய 113 மில்லியன் யூரோ மதிப்புடைய லண்டன் மேன்ஷனை வாங்கியுள்ளார
முதலீட்டு நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் இணை உரிமையாளரான ரூயாவின் குடும்ப அலுவலகம் இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பிரிட்டன் தலைநகரில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய குடியிருப்பு ஒப்பந்தங்களில் ஒன்று இது எனக் கூறப்படுகிறது.
லண்டனின் 150 பார்க் ரோட்டில் உள்ள ரீஜண்ட்ஸ் பூங்கா நோக்கி அமைந்துள்ள ஹனோவர் லாட்ஜ் மாளிகை ஜிப்ரால்டரில் உள்ள நிறுவனத்தின் மூலம் இந்த மாதம் விற்பனைக்கு வந்தபோது, ரவி ரூயாவின் குடும்பம் அதனை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியதாக தெரியவந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாளிகை ரஷ்ய அரசு நடத்தும் எரிசக்தி நிறுவனத்தின் துணை நிறுவனமான காஸ்ப்ரோம் இன்வெஸ்ட் யுகின் (Gazprom Invest Yug) முன்னாள் துணை தலைமை நிர்வாக அதிகாரி கோன்சரென்கோவுக்கு சொந்தமாக இருந்தது. அவர் 2012ஆம் ஆண்டில் கன்சர்வேடிவ் கட்சியின் ராஜ்குமார் பக்ரி என்பவரிடமிருந்து 120 மில்லியன் பவுண்டுகளுக்கு இந்த மேன்ஷனை வாங்கினார்.
இந்த மேன்ஷன் கவர்ச்சிகரமான விலையில் கிடைத்ததால் ரூயாவின் குடும்பத்தினர் இதில் முதலீடாக செய்ய முடிவு செய்தனர் என்றும் ரூயா குடும்ப அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் வில்லியம் ரெகோ தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1,919 கோடி ரூபாய் விலை கொடுத்து ரூயாவின் குடும்பம் இந்த மேன்ஷனை வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.