யாழ்.ஆனைக்கோட்டை – கல்லூண்டாய் இந்து மயானத்தில் சடலங்கள் எரிக்கின்ற புகை வீடுகளுக்குள் வருகின்றது. அந்த புகையை நாங்கள் சுவாசிப்பதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றோம் என கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கு இந்த கல்லூண்டாய் பகுதியில் குடியேற்றத்திட்டம் அமைத்து கொடுத்து எங்களை இங்கே குடியமர்த்தி இருக்கின்றார்கள்.
ஆனால் எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. எங்களது குடியேற்றத்திட்யத்தில் இருந்து சுமார் 30 மீற்றர்கள் தொலைவில் ஆனைக்கோட்டை – கல்லூண்டாய் மயானம் அமைந்துள்ளது.
அந்த மயானத்தில் சடலங்கள் எரிக்கின்ற போது அந்த புகை எமது வீடுகளுக்குள் வருகின்றது. இந்த புகையை சுவாசிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த மயானத்தை இடம் மாற்றி புதிய மயானத்தை அமைப்பதற்கான நிதி வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது மயானம் இருக்கின்ற இடத்தை விட்டு தொலைவில் ஒரு காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் காணியை ஒதுக்கி தருமானால்
அதில் புதிய மயானத்தை அமைக்க முடியும் என வலி, தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜெபனேசன், பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இருந்த காலப்பகுதியில் கூறினார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் இதற்காக சுமார் ஒரு ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் கூறுகின்றார். ஆனால் தற்போது பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சபேசன் புதிய மயானம் அமைப்பதற்கு நிதி இல்லை என்று கூறுகின்றார்.