21 C
New York
Monday, October 7, 2024
spot_img

அரிசி இறக்குமதியில் 350 மில்லியன் டொலர்கள் எஞ்சியுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதேபோல் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையன நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்ட பின்பும் அந்த சலுகைகளின் நலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களினது விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாத நிறுவனங்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி நாட்டை பொறுப் பேற்றுக்கொண்ட போது நாடு பெரும் நெருக்கடிகள் பலவற்றுக்கு முகம் கொடுத்திருந்தது. அவ்வாறான சந்தர்ப்பத்திலயே நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவசியமான அமைச்சு ஒன்றை எனக்கு வழங்கினார்.

எதிர்காலத்தில் அரிசி இறக்குமதிக்கான அவசியம் இல்லாமல் போகும் 

நாட்டிற்குள் சில உணவு பொருட்கள் இரண்டு நாட்களுக்கு மட்டுமே மீதமிருந்தன. விவசாய துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் உரக் கொள்கை உணவுத் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக மாறியிருந்தது. எவ்வாறாயினும் விவசாயிகளுக்கு அவசியமான உரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உரிய வகையில் நடைமுறைப்படுத்தினார். அந்த வகையில் ஜனாதிபதியின் சரியான நடவடிக்கையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் அரிசி இறக்குமதிக்கான அவசியம் இல்லாமல் போகும்

அதனால் அரிசி இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு மீதமாகும். அவ்வாறு மீதமாகும் பணத்தைக் கொண்டு ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு கிட்டும். தற்போது பொருட்கள் இறக்குமதி செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன. நிறுவனங்களுக்கு அவசியமான கடன் பத்திரங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளும் வலுவாக முன்னெடுக்கப்படுகின்றது.

வர்த்தகச் சந்தையில் நிலைமை சுமூகமாக மாறியிருந்தாலும் பொருட்களின் விலைகள் ஏன் குறையவில்லை என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது. ஒக்டோபர் மாதமளவில் பொருளாதார வளர்ச்சியை தனிப் பெறுமானத்திற்கு கொண்டு வருவதற்கான இயலுமை கிட்டும் என நம்பிக்கை உள்ளது. 2022 ஆம் ஆண்டில் காணப்பட்டதை விடவும் இன்றளவில் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன

Related Articles

Latest Articles