சிம்பு நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் எஸ்டிஆர் 48 படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே பஞ்சாயத்தில் சிக்கியுள்ளார் சிம்பு. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு படம் பண்ணி கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு விட்டு, தற்போது அவர் கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதாக பிரச்சனைகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர் விமர்சனங்களால் துவண்டு போயிருந்த சிம்பு ‘மாநாடு’ படத்தின் மூலம் தரமாக கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார். இந்தப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதனிடையில் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவான ‘பத்து தல’ படத்தில் மிரட்டலான தாதாவாக நடித்தார் சிம்பு. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப்படம் மூலமாக ஹாட்ரிக் ஹிட்டடித்தார் சிம்பு. இந்தப்படத்தை தொடர்ந்து சிம்பு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
இந்நிலையில் தான் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் வரவேற்பை பெற்ற தேசிங்கு பெரியசாமி இந்தப்படத்தை இயக்குகிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் இந்தப்படத்தினை உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.