மெல்பேர்னில் உள்ள தனது மகளைப் பார்வையிட அவுஸ்ரேலியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர், அரிய வகையான சதை உண்ணும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உயிரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் அவரது இடது கையை துண்டித்துள்ளனர்.
74 வயதான கார்மெல் ரோட்ரிகோ மெல்போர்னில் உள்ள தனது மகள் காயத்திரி பெரேராவைப் பார்க்கச் சென்றபோது, அவருக்கு இடது கையில் வலி ஏற்பட்டது.
கடந்த மாதம் ஒரு நாள் இரவு அவர் மயக்க நிலைக்குச் செல்லத் தொடங்கினார் என்று அவரது மகள் காயத்ரி கூறினார்.
அவர் வலியால் கத்தினார், கை முழுவதும் வீங்கி, சற்று நீல நிறமாக மாறியது.
கார்மெல் தனது கைகளில் உள்ள உணர்வை இழக்கத் தொடங்கினார், மருத்துவர்கள் இது ஒரு தொற்று என்று சொன்னார்கள், ஆனால் அவர்களால் எந்த வகையை அடையாளம் காண முடியவில்லை.
நோய்ப் பரவல் மிகவும் வேகமாக இருந்தது. அவர் உயிர் பிழைக்க 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.
அவரது வலியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் மயக்கமடையச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கார்மல் இப்போது மிகவும் கொடிய புருலி அல்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக “சதை உண்ணும்” நோய் என்று குறிப்பிடப்படுகிறது.
நோயறிதலைத் தொடர்ந்து, நோயின் முன்னேற்றத்தைத் தடுக்க கார்மலின் இடது கை துண்டிக்கப்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக அவர் மருத்துவமனையில் மயக்க நிலையில் உள்ளார்.
அவர் சுயநினைவுடன் இருந்தால் வலி தாங்க முடியாததாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தோல் மற்றும் மென்மையான திசுக்களை சேதப்படுத்தும் புருலி அல்சர், கொசுக்கள் மற்றும் பிற விலங்குகளால் பரவுகிறது.
இந்த நோய் முன்னர் அவுஸ்ரேலியாவின் பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.