16.1 C
New York
Sunday, September 8, 2024
spot_img

யாழ்ப்பாணத்தில் நடந்த இரண்டு போர்க்குற்றங்கள் குறித்த தகவல்களை கோருகிறது பிரித்தானிய பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை  மற்றும், ஊர்காவற்றுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ள பிரித்தானிய பொலிசார், குறித்த சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு போருடன் தொடர்புடைய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு  புலனாய்வு பிரிவினர் தமது விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை கொண்டவர்கள் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை  அடுத்து  இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, தீவிரவாத எதிர்ப்பு புலனாய்வு பிரிவின் தளபதி டொமினிக்  முர்பி,

இந்த குற்றங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் மீது நீடித்த மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த விசாரணைகளின்  ஒரு பகுதியாக நாங்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளோம்.

 இது மிகக் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளின், கடமைப்பாடுகளின் முன்னேற்றமாகும்.

அனைத்து தீவிரமான வழக்குகளை போலவே இந்த வழக்கை தொடர்ந்து கட்டமைக்க முடிந்த வரை நேரில் பார்த்த சாட்சியங்கள் தேவை.

இலங்கையின் உள்நாட்டு போரின்போது நடந்த சம்பவங்கள் குறித்து இதுவரை முன்வந்து தகவல் வழங்காத நபர்கள் இருப்பதை நாம் அறிவோம்.

பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு அந்த நபர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

 நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம். உங்கள் தகவல் மிகவும் அந்தரங்கமான முறையில் நம்பிக்கையுடன் நடத்தப்படும்.

விசாரணைக் உதவக் கூடிய நேரடி தகவல்களை கொண்டிருக்கும்  நபர்களிடம் இருந்து,  குறிப்பாக 2000 ஆண்டுகளில் முற்பகுதியில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் அல்லது அந்த நேரத்தில் இலங்கையில் வசித்த உறவினர்கள் அல்லது நண்பர்களைக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அதன் பின்னர் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து தகவல்களை பெற அதிகாரிகள் ஆவலாக உள்ளனர்.

இதுபற்றிய தகவலை வழங்க போர்க்குற்றங்கள்  குழுவிற்கு நேரடியாக SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. என்ற முகவரிக்கு  மின்னஞ்சல் அனுப்பவும்.

அல்லது +44 (0)800 789 321 என்ற அந்தரங்க தொலைபேசியில் பொலிசாருக்கு அழைக்கவும். என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் பிரிவு 51 ன் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில், 2023 நவம்பர் 21 ஆம் திகதி  லண்டனில்  60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்  பொலிஸ்  விசாரணையின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியின் போது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதே குற்றத்திற்காக, சந்தேகத்தின் பேரில் 48 வயதான ஒருவர் 2022 பெப்ரவரியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து  பொலிசார் இந்தக் கைதினை மேற்கொண்டுள்ளனர். குறித்த நபர் விசாரணைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2000ஆம் ஆண்டு ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்தச் சம்பவம் தொடர்புடையது.

இரண்டு சம்பவங்களும் 2017 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸ் போர்க்குற்றங்கள் குழுவிற்கு அனுப்பப்பட்ட பரிந்துரையின் ஒரு பகுதியாகும்.

இது பெருநகர பொலிசின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைப் பீடத்தினால் நடத்தப்படுகிறது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், பிரித்தானிய பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles