-8.2 C
New York
Monday, December 23, 2024
spot_img

புலம்பெயர் தமிழர்களிடம் கோடிக் கணக்கில் சுருட்டிய போலி வைத்தியர் கைது.

புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து, கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , வைத்தியர்களுக்கான போலி  அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து,  தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்தி, ஏழைகளுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக, புலம்பெயர்  தமிழர்களை ஏமாற்றி, பெரும் தொகைப் பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

யாழ்.நகர பகுதியில் உள்ள தனது காணியை விற்பதாக கூறி, அவர்  போலி ஆவணங்களை அனுப்பி, கனடா வாசியிடம் இருந்து ஒரு கோடி 40 இலட்ச ரூபாய் பணத்தை உண்டியல் மூலம்பெற்றுள்ளார்.

தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கனடா வாசி கண்டறிந்ததை அடுத்து,  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைகளை முன்னெடுத்த  பொலிஸார் மோசடியில் ஈடுபட்ட நபர் , போலியாக தன்னை ஒரு மருத்துவர் என கூறி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் பலரிடம்,  பல ஆண்டு காலமாக இலவச மருத்துவ முகாம்களுக்கு என பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்  என தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த நபர் சுமார் ஒரு கோடி 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர பகுதியில் பயணிப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் அவரை  கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட வேளை ,காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள் , 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் பல இலட்ச ரூபாய் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles