நேற்று வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற இவர், தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் தனது கனவு எனத் தெரிவித்தார்.
“எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.
அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும்.
தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த மாணவியின் வெற்றியை அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடியுள்ளனர்.