10 வயது மாணவிகளை துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் பற்றிக் டிறஞ்சனால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரிபவருக்கு எதிராக மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டுக்கு அமைவாக ஆசிரியர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டு ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டது. அவருக்கு எதிராக பணிமனை ரீதியான நடவடிக்கை வலிகாமம் கல்விப்பணிமனையால் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கு அமைவான விசாரணை அறிக்கை, கல்வி அமைச்சின் செயலருக்கு நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் காலை குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் பணியைத் தொடர தடைவிதிக்கப்பட்டு மாகாணக் கல்வி அமைச்சின் செயலரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது