பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த சந்தேகத்தை எழுப்பினார்.
“அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது ஜனாதிபதிக்கும்,நாட்டுக்கும் பாதகமாக அமையும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச தொடர்ந்து வலியுறுத்திய போது, 113 உறுப்பினர்களின் ஆதரவை கையெழுத்துக்கள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்டு வாருங்கள், நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு பசில் ராஜபக்ச எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி பக்கம் இருப்பதால், அந்த கட்சியின் தலைவர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜபக்சர்களிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் நிலைமை தமக்கும் ஏற்படுமோ என ராஜபக்சர்கள் அச்சமடைகிறார்கள்.
நாட்டு மக்கள் தம் பக்கம் என்று நினைத்துக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவுக்கு இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும். “ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.