பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை சென்ற நான்கு இலங்கையர்களே அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என, தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான்,மொஹமட் ரஸ்தீன் ,மொஹமட் ஃபரிஷ் ஆகிய நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர்களாவர்.இவர்கள் இந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள்.
இவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்காக தாக்குதல்களை நடத்த சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும் , இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் 3 அல்லது நான்கு மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.
ஒருசில இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மதரஸா பாடசாலைகள் பற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆனால் அரசாங்கம் முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லை.
ஆகவே பரிந்துரைகளை அலட்சியப்படுத்தாமல் செயற்படுத்த வேண்டும் இல்லையேல் இலங்கையில் மீண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெறலாம்“ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.