இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பயணத்தின் போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை ‘வட்டுவாகல் பாலம்’ எனும் மேற்கோளுடன் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் ’15 வருடங்களுக்கு முன்னர் வட, கிழக்கில் விடுதலைப்புலிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இப்பாலத்தைக் கடந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது இந்த நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்’ என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
‘இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மிகக்குறுகியதொரு பகுதிக்குள் சுமார் 300,000 தமிழர்கள் அடைபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னைய சில மாதங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது’ எனவும் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்களே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் 6 மாதமேயான குழந்தை உட்பட பல குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த 30 வருடகால யுத்தத்தில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத , வலிந்து காணாமலாக்குதல்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். இவற்றால் சுமார் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 60,000 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்’ எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.