9.2 C
New York
Friday, October 18, 2024
spot_img

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்- ஒரு பயணி பலி, 71 பேர் காயம்.

லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் காற்றுச் சுழற்சியால் குலுங்கியதில், அதில் பயணம் செய்த பிரிட்டன் பயணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் 71 பயணிகள் காயமடைந்தனர்.

லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு, 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் நேற்றுப் புறப்பட்டு சென்ற விமானமே, கடல் மட்டத்தில் இருந்து 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென சமநிலையை இழந்து குலுங்கியது.

இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் உடைமைகளும் சரிந்து விழுந்தன.

இதையடுத்து, பாங்கொக்கில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்திற்குள் சென்று மீட்புக்குழுவினர், பயணியரை பத்திரமாக மீட்டனர்.

இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக விமானத்தில் பயணித்த 73 வயதுடைய பிரிட்டனைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

காயமடைந்த 71 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு வருத்தத்தை பதிவு செய்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணியருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயார் எனவும் குறிப்பிட்டுஉள்ளது.

Related Articles

Latest Articles