யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, பன்னாலை பகுதியில் அனுமதி பெறாத உணவுப்பொருட்கள் தயாரிப்புக் கூடம் ஒன்றைச் சோதனையிடச் சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இருவர்,அறை ஒன்றுக்குள் பூட்டி வைக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமை பெற்ற, பன்னாலை பிரதேசவாசி ஒருவரும், சிங்கள பெண் ஒருவருமே, அந்த தொழிற் கூடத்தை நடத்தி வருகின்றனர். அங்கு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அனுமதியின்றிச் செயற்படும் அந்த தொழிற்கூடத்தை சோதனையிடுவதற்கு நேற்று பதில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சென்றிருந்தனர்.
பதிவு செய்யப்படாமல் இயங்குவது குறித்து சுட்டிக்காட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்து, உரிமையாளர்களின் அடையாள அட்டையை கேட்ட போதே, சுகாதார பரிசோதகர்கள் இருவரையும் தொழிற்கூடத்துக்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து தெல்லிப்பளை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர், பொதுச்சுகாதார பரிசோதகர்களை மீட்கப்பட்டனர்.
தொழிற்கூட உரிமையாளரும், பெண்ணும் தலைமறைவான நிலையில், நேற்று மாலை அவர்கள் இருவரும் தெல்லிப்பளை பொலிசாாரால் கைது செய்யப்பட்டனர்.