பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பொறுப்புக்கூறலைக் வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், அதுபற்றி அறிக்கை வெளியிடுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது.
‘இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்’ என்ற தலைப்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கடந்த வெள்ளிக்கிழமை 45 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், இலங்கையில் தொடரும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறை” பற்றிக் குறிப்பிட்டிருந்ததுடன், குற்றவியல் நீதி மற்றும் பிற தொடர்புடைய செயல்முறைகள் மூலம், பொறுப்புக்கூற வைப்பதற்கு, உள்நாட்டு மட்டத்தில் புதிய நடவடிக்கையை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு, உலகளாவிய அதிகார வரம்பு அல்லது பிற அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி, விசாரணைகள் மற்றும் வழக்குகளைத் தூண்டுதல் மற்றும் இலக்குத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அறிக்கை வெளிவந்துள்ள நேரம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குற்றச்சாட்டுகள் முழுவதையும் அரசியலாக்குவது போல் தெரிகிறது என்று கூறினார்.
மூத்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற “ஆதாரமற்ற, தெளிவற்ற மற்றும் பக்கச்சார்பான அறிக்கையை வெளியிட ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க்கிற்கு, ஐ.நா உறுப்பு நாடுகள் எந்த ஆணையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.