28.1 C
New York
Friday, July 26, 2024
spot_img

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சர்வதேச பிரதிநிதிகளும் பங்கேற்பு.

முள்ளிவாய்க்கால்  படுகொலையின்  15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.

அகவணக்கத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாக, முள்ளிவாய்க்கால் பிரகடனம் செய்யப்பட்டு, அதன் பின்னர் பிரதான சுடர் ஏற்றப்படவுள்ளது.

குறித்த சுடரை பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி ஒருவர் ஏற்றவுள்ளதோடு அதனைத்தொடர்ந்து, ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நடைபெறவுள்ளது.

பேதங்களைத் துறந்து, சுயலாப, சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து பொது நிகழ்ச்சி நிரலில் தமிழர்களாக ஒன்றுபட்டு இந்த நினைவேந்தலில் இணையுமாறு  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு,கிழக்கு) கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இன்று மாலை 6 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும், மணி ஒலி எழுப்புவதுடன் ,  இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருமாறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கோரியுள்ளது.

இந்த நினைவுகூரல் நிகழ்வில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில், சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இன்று மாலை 5 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வம மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் காலை 11மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வும் விசேட வழிபாடுகளும் பட்டிப்பளையில் நடைபெறவுள்ளது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் நினைவேந்தல்களுக்கு ஆதரவாகவும், நீதியையும் பொறுப்புக்கூறலையும் கோருவதற்கான ஒரு வெளியாகவும் இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles