கம்பஹா மாவட்டம் வெலிவெரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பலரை மோசமாக தாக்கியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 50 பேர் காயமடைந்தனர்.
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட மேஜர் ஜெனரல் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் 3 இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மேல் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சட்டமா அதிபர் தவறிவிட்டார் எனவும், அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாகவும், மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தி, விசாரணையை சரியாக முன்கொண்டு செல்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.