24.9 C
New York
Saturday, July 27, 2024
spot_img

வவுனியா இரட்டைக் கொலை – சாட்சியை அச்சுறுத்தும் பெண் கிராம அலுவலர்.

வவுனியா- தோணிக்கல் பகுதியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

வவுனியா- தோணிக்கல் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி அதிகாலை வீடு ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய குழுவினர், பெற்றோல் ஊற்றி தீவைத்ததில், இளம் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் நடந்த போது, தாக்குதல் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார்.

குறித்த சாட்சியத்தில், தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார் என்றும், இதன் பின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் தனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார் என்றும் மன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் கிராம அலுவலரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல் விடுக்கும் பெண் கிராம அலுவலர், கொலை செய்யப்பட்ட சுகந்தனுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்தவர் என்றும், அதன் பின்னர் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய, தடுப்பில் உள்ள நபர்- குறித்த கிராம அலுவலரை காதலித்து அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் , அதனால் ஏற்பட்ட முரண்பாடு தான் இந்தக் கொலைக்கு காரணம் என்றும், வீட்டு உரிமையாளர் சாட்சியமளித்துள்ளார்.

இந்த வழக்கு அடுத்த தவணைக்காக ஜூன் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles