16.1 C
New York
Sunday, September 8, 2024
spot_img

விமானங்கள் நடுவானில் குலுங்குவதற்கு பருவநிலை மாறுபாடும் முக்கிய காரணம்.

விமானங்கள் நடுவானில் திடீரென குலுங்குவதற்கு, பருவநிலை மாறுபாடு பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற நடுவானில் விமானங்கள் திடீரென குலுங்கும் சம்பவங்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

சி.ஏ.டி., என்ற ‘கிளியர் ஏர் டர்புலன்ஸ்’ எனப்படும் தெளிவான வானிலை கொந்தளிப்பே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

வானில் மேகமூட்டமாக இருப்பது, குறிப்பிட்ட பகுதியிலுள்ள சீதோஷ்ண நிலை உள்ளிட்டவற்றை கணித்தே, விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சி.ஏ.டி.,யில் இவ்வாறு எந்த அறிகுறியும், முன்னெச்சரிக்கையும் இருக்காது. வானம் தெளிவாக இருக்கும். ரேடார்களிலும் இது சிக்காது.

வானில் வெப்பநிலை மாற்றம், பிற காரணிகளால், காற்றின் வேகம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம். இதுபோன்ற இயற்கையான நிகழ்வு ஏற்படும்போது, அந்தப் பகுதி வழியாகச் செல்லும் விமானங்கள் சிக்கினால், அது பெரிய அளவில் குலுங்கும்.

உயரத்தில் பறக்கும்போது, விமானத்தில் பயணிப்போர், ஆசனப்பட்டி அணியத் தேவையில்லை. இது போன்ற நேரத்தில் விமானம் குலுங்கும்போது, பயணிகளுக்கு காயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, பிரிட்டனின் கிழக்கு ஏங்கலியா பல்கலைக்கழகத்தின் பருவநிலைத் துறை பேராசிரியர் மனோஜ் ஜோஷி கூறுகையில்,

“குறிப்பிட்ட உயரத்தில் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் தான் சி.ஏ.டி., ஏற்படுகிறது. இதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், சில நேரங்களில் பயணிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

அதனால், எப்போதும் ஆசனப் பட்டிஅணிந்திருப்பது பாதுகாப்பானதாகும். மேலும், சி.ஏ.டி., போன்ற சூழலின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சி, விமானி மற்றும் விமானத்தில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். பயணிகளை எப்படி எச்சரிப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்த சி.ஏ.டி., நீண்ட காலமாக இருந்தாலும், தற்போது அதிகளவில் நடக்கிறது. இதற்கு அதிகளவில் விமானங்கள் தற்போது பறப்பதால், அதிக எண்ணிக்கையில் இதை சந்திக்க வேண்டியுள்ளது.

பருவநிலை மாறுபாடு பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

Related Articles

Latest Articles