ஈழத்தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட பாதணிகளை, உற்பத்தி செய்த டிஎஸ்ஐ நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர்,க.சுகாஷ், அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் இந்தப் பாதணிகளை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றும் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து தமிழர்களின் உணர்வுகளை குறித்த நிறுவனம் அவமானப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள பாதணிகளை உடனடியாக மீள பெற வேண்டும் என்றும். அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.