இந்தியாவின் குஜராத்தில் கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு பிரிவில், ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பிரம்மாண்ட கேளிக்கை அரங்கில் அமைந்துள்ள விளையாட்டு பிரிவில், குழந்தைகள், பெரியவர்கள் கூடியிருந்த போது, நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 17 சிறுவர்கள் உள்ளிட்ட 28 பேர் பலியானதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்
மற்ற இடங்களுக்கும் தீ வேகமாக பரவியதால் அங்கு வந்த மேலும் பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
தீயணைப்பு படையினர் தீயை அணைக்க கடுமையாக போராட வேண்டியிருந்தது. மீட்கப்பட்ட 28 சடலங்களில் பல இனங்காண முடியாத நிலையில் இருப்பதால் மரபணுச் சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு மின்கசிவே காரணம் எனவும், இங்கு விளையாட்டு பிரிவு அமைக்க உரிய அனுமதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
விளையாட்டு பிரிவு கூடாரம் அமைத்த மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


