22.6 C
New York
Thursday, September 19, 2024
spot_img

இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர கனேடிய பிரதமர் அழைப்பு!

இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூருவதற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-

” இலங்கையில் கால் நூற்றாண்டு காலம் நீடித்த ஆயுதப் போர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்டவற்றில் பல பத்தாயிரம் தமிழர்கள் அவலமாக உயிரிழந்தார்கள்.

இன்று வரை மேலும் பலர் காணாமற்போயோ, காயமடைந்தோ, அல்லது இடம்பெயர்க்கப்பட்டோ உள்ளார்கள்.

அர்த்தமற்ற இந்த வன்முறையால் ஏற்பட்ட நீடித்திருக்கும் வலியுடன் வாழும் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப் பிழைத்தவர்கள், மற்றும் அவர்களது அன்புக்குரியவர்கள் ஆகியோரை நாம் இன்று கௌரவிக்கிறோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியைத் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஒருமனதாக அங்கீகரித்தது.

போரின் போது புரியப்பட்ட குற்றங்களுக்கும்,  இலங்கையில் அனைவரும் எதிர்கொண்ட துன்பங்களுக்கும், நீதி கிடைப்பதற்கும் பொறுப்புக்கூறப்படுவதற்கும் நாம் எப்போதும் குரல்கொடுப்போம்.

முன்னாள்  இலங்கை அரச அதிகாரிகள் நான்கு பேர் மீது, ஆயுதப் போரின் போது அவர்கள் இலங்கையில் புரிந்த மனித உரிமை மீறல்களுக்காக 2023 ஆம் ஆண்டில் நாம் தடைகளை விதித்தோம். இலங்கையில் மனித உரிமைகளுக்குக் கனடா பலமாகக் குரல் கொடுக்கிறது.

இலங்கையில் அதிகமான மீளிணக்கம், நீதி, பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றைக் கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு எமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.

நீடித்திருக்கும் அமைதியைக் கட்டியெழுப்பத் தேவையான அடிப்படை அம்சங்களான மதம், நம்பிக்கை, பன்மையியல் ஆகியவற்றின் சுதந்திரத்தை மதித்து நடக்குமாறு நாம்  இலங்கை அரசைத் தொடர்ந்து கோருகிறோம்.

சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதவைகளான மனித உரிமைகள், நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுக்கவேண்டிய எமது கூட்டுப் பொறுப்பை இந்த நாள் எமக்கு நினைவுபடுத்துகிறது.

உலகெங்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பணியைக் கனடா ஒருபோதும் நிறுத்தமாட்டாது.

இலங்கையில் ஆயுதப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களை கெளரவிப்பதற்கு இணையுமாறு கனேடிய அரசின் சார்பாக நான் கனேடியர்களை அழைக்கிறேன்.

மேம்பட்டதும், அனைவரையும் அதிகம் உள்ளடக்கியதும், மேலும் அமைதியானதுமாக உலகை எவ்வாறு மாற்றலாமென நாம் ஒன்றுசேர்ந்து சிந்திப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles