கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை எடுத்துச் செல்லும் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தாக்கியுள்ளதுடன், கோபத்தில் அவ்வாறு தாக்கியதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தமது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதற்காக, கடந்த 14 ஆம் திகதி அதிகாலை மெய்ப்பாதுகாவலர்களுடன் விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயன்ற போது, துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்களை அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர.
இதனால், விமான நிலைய பாதுகாவலர்களுடன் முரண்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணவீர, பின்னர், பொதிகளை எடுத்துச் சென்ற பணியாளருக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை விட குறைவாக கொடுத்த போது, அவர் மீதி பணத்தை கேட்டதால் ஆத்திரத்தில், அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பணியாளர், அச்சம் காரணமாக பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தாம் கோபத்தில் அவரைத் தாக்கியதாக, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.