29.9 C
New York
Tuesday, July 1, 2025
spot_img

ரஷ்யப் போரில் படுகாயத்துடன் திரும்பிய கூலிப்படை சிப்பாய்

குருநாகல் – கும்புக்கெட்ட பிரதேசத்தில் இருந்து, ரஷ்யப் போரில் கூலிப்படையாகப் பங்கேற்கச் சென்ற, எரந்த சிந்தக தென்னகோன் என்பவர், போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில் கடந்த 9ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

ரஷ்யாவில் வேறொரு வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் ரஷ்ய கூலிப்படையில் இணைந்து கொண்டதாகவும், போர்க்களத்தில் தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எரந்த, அங்கிருந்து தப்பித்து நண்பரின் உதவியுடன் இலங்கை வந்துள்ளார்.

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுவதற்காக எரந்த, ரஷ்ய கூலிப்படையில் சேர்ந்துள்ளார். ஆனால், அவர் நாடு திரும்புவதற்கு முன்னரே, அவரது மனைவி கடந்த மார்ச் மாதம் உயிரிழந்து விட்டார்.

அதேவேளை, ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், கூலிப்படையாக சென்ற இலங்கைப் படையினர் தொடர்பாக இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles