அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகச் சீனா இருக்கிறது. இருப்பினும், கடந்த சில காலமாகவே அங்குப் பொருளாதார சிக்கல் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே மற்றொரு அதிர்ச்சித் தகவல் சீனா குறித்து வெளியாகியுள்ளது. அதாவது சீனாவில் உள்ள பல நகரங்கள் படிப்படியாகப் பூமியில் புதைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
50க்கும் மேற்பட்ட சீன ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்துள்ளனர். இதை ஆங்கிலத்தில் land subsidence என்று அழைக்கிறார்கள். சீனாவின் முக்கிய நகரங்களில் கிட்டத்தட்டப் பாதி நகரங்களில் இந்த பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூமியின் மேற்பரப்பு படிப்படியாகப் புதையும். இதை ஆய்வாளர்கள் land subsidence என்று அழைக்கின்றனர். அதாவது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் கடந்த சில தலைமுறைகளாகவே அங்கு நடந்த கட்டுமானங்கள் முக்கிய காரணமாக இருந்தது.. ஆனால், இப்போது அந்த அதிகப்படியான கட்டுமானங்களே சீனாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
சீனா முழுக்க இந்த பிரச்சினை பரவலாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற திட்டமிடல், உள்கட்டமைப்பு குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், நகரம் இப்படி மெல்ல மண்ணுக்குள் புதைவது பல கோடி மக்களை ஆபத்தில் தள்ளும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.