இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .
இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது கடினமானது எனப் பலரும் கூறியபோதும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒற்றுமை ஒன்றே தேவையெனவும் அவர் தெரிவித்துள்ளார் .
நுவரெலியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் இன்று நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நுவரெலியா, ஹங்குரங்கெத்த, மஸ்கெலியா, கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சிலர் விமர்சித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவு கிடைத்தால் அந்த திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக மாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.