யாழ் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்படுவதால் பிரதேசவாசிகள் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டி, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வைத்தியசாலை அதிகாரிகளுக்கு மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான குப்பைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், நிலத்தடி நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரியாலைப் பிரதேசத்தில், யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதியை மறித்து, சுமார் மூன்று மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள், கழிவுகளை உடனடியாக அகற்றி, மக்கள் வாழ்வதற்கு ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது