23.2 C
New York
Tuesday, July 1, 2025
spot_img

மலை உச்சியில் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலியின் சிதைவுகள்!

ஈரானிய ஜனாதிபதி எப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பயணம் செய்த ஹெலிகொப்டர் முற்றாக சிதைந்த நிலையிலும், சடலங்கள் எரிந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னைய செய்தி

ஈரான் ஜனாதிபதி எப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர், விபத்துக்குள்ளாகியதாக, அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்துக்கருகே நேற்று நண்பகலுக்கு முன்னதாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அயல்நாடான அஸர்பைஜான் எல்லையில், அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவ்வுடன் இணைந்து, இரண்டு அணைகளை ஈரானிய  ஜனாதிபதி ரைசி நேற்று திறந்து வைத்திருந்தார்.

இதன் பின்னர், தெஹ்ரான் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே, ஈரானிய ஜனாதிபதி பயணித்த ஹெலி மாயமாகியுள்ளது.

அவரது தொடரணியில் மூன்று ஹெலிகொப்டர்கள் இருந்த நிலையில், ஏனைய இரண்டு ஹெலிகளும் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன.

ரைசியுடன், ஈரான் வெளிநாட்டமைச்சர் ஹொஸைன் அமிர்-அப்டொல்லஹியன், ஈரானின் அதியுயர் தலைவரின் கிழக்கு அஸர்பைஜானுக்கான பிரதிநிதி அயோத்துல்லாஹ் மொஹமட் அலி அலெ-ஹஷெமும் அந்த ஹெலிகொப்டரில் பயணித்தனர்.

விபத்துக் குறித்து அறிந்ததும் தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், கடுமையான மூடுபனி காரணமாக தேடுதல்களில் பாதிப்பு ஏற்பட்டது.

அதேவேளை, ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றை அஸர்பைஜான் நாட்டு ட்ரோன் ஒன்று படம் பிடித்துள்ளது. இதையடுத்து குறித்த இடத்துக்கு மீட்பு அணிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அந்த இடம் மலை உச்சியில் அமைந்திருப்பதால், மீட்பு அணிகள் செல்வதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

மீட்புப் பணிகளுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்திருக்கின்றன.

Related Articles

Latest Articles