துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஸ்லோவாகியா பிரதமர் ரொபர்ட் ஃபிகோ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோவாகியாவின் ஹன்ட்லோவா நகரில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், வெளியே வந்து பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, பிரதமர் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
வயிறு, மார்பு, கால் பகுதிகளில் ஐந்து குண்டுகள் பாய்ந்த நிலையில், படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தவுடனேயே பிரதமரின் பாதுகாவலர்களில் இருவர் அவரை பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஸ்லோவாகியா பிரதமர் ரொபர்ட் ஃபிகோவை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலீஸார் மடக்கி பிடித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.